காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் கூறப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை இரண்டு நாள்களின் பின் நேற்று தனியார் வைத்தியசாலையில் மீளவும் சேர்க்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் காய்ச்சல் நீடித்தமையால் பாலகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டது. குழந்தையை சடலமாக புதன்கிழமை நள்ளிரவு உறவினர்களிடம் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் (7) வீட்டில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது.
அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து குழந்தையின் சடலம் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இந்து முறைப்படி வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள் பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இறுதிச் சடங்கு நேற்று நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றும் திருப்பம் ஏற்பட்டது.
“இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்த நிலையில் குழந்தை நேற்றும் மலம் சலம் கழித்துள்ளார். அதனால் அவர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எந்த வைத்தியசாலை என வெளியில் தெரிவிக்க நாம் விரும்பவில்லை. எந்த தகவல் என்றாலும் நாளை கூறுகின்றோம்” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.