மின்சாரக்கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்தாததினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம் காணப்படும் அதேவேளை, பணத் தொகையை செலுத்த மின்சார சபை வழங்கிய காலஅவகாசமும் நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்புக்களை வழங்கும் இலங்கை மின்சார சபைக்கு யாழ்.போதனா வைத்தியசாலையினால் கடந்த 8 மாதாகாலத்திற்கும் அதிகமாக மின்சார கொடுப்பனவு செலுத்தப்படாமல் உள்ளதாக தெரியவருகின்றது.
இதன்படி சுமார் 31 மில்லியன் ரூபா தற்போது செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜாவுடன் தொடர்பு கொண்டு வினவியபோது. யாழ்.போதனா வைத்தியசாலையினால் இலங்கை மின்சார சபைக்கு மின்சார நிலுவையாக பெரிய ஒரு தொகைப்பணம் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது என்பது உண்மை தான்.
அண்மையில் நாம் எமது அமைச்சிலிருந்து 5 மில்லியன் ரூபா பணத்தை பெற்று மின்சார சபைக்கு செலுத்தியிருந்தோம். ஆயினும் இன்னமும் பாரிய தொகை நிலுவையாக உள்ளது. இது தொடர்பில் எமது அமைச்சிற்கு அறியத்தந்துள்ளோம் என்றார்.
மேலும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில்,
சுமார் 8 முதல் 9 மாதகாலங்களாக மின்சாரத்திற்கான கொடுப்பனவு இன்னமும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் நாங்கள் கடிதம் மூலம் அவர்களுக்கு அறியத்தந்ததோடு மிகுதி கொடுப்பனவை செலுத்த தவறின் உடனடியாக மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம்.
இதன்போது மின்சார இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டாம் எனவும் தமக்கு கால அவகாசம் தேவையென்றும் எம்மிடம் அவர்கள் கால அவகாசம் கோரினார்கள். அதன்படி நாம் வழங்கிய கால அவகாசமும் முடிவடைந்து விட்டது. எந்நேரமும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனர்.
இதேவேளை கடந்த பல மாதங்களாக செலுத்தப்படாமல் உள்ள நிலுவை தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு யாழ்.போதனா வைத்தியசாலையினால் பல அறிவிப்புக்கள் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதோடு இவ்வாறு மின்சாரம் நிறுத்தப்பட்டால் நோயாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரிய அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.