யாழ் புல்லுக்குளம் குறித்து தனியார் இணையத்தளத்தில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது- ஆளுநா் ஜிஏ சந்திரசிறி

chandrasiriயாழ் மாநகர எல்லைக்குள் மாநகர அழகை மேம்படுத்தும் நோக்கில் புனரமைக்கப்பட்ட புல்லுக்குளம் குறித்து 21.05.2013 அன்று புதிய யாழ்ப்பாணம் எனும் இணையத்தளத்தில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என்று வட மாகாண ஆளுநா் ஜிஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது விடயம் பற்றி ஆளுநா் ஜிஏ சந்திரசிறி அவர்களிடம் கேட்டு அறிந்துகொண்ட தகவல்கள் இவை:

புல்லுக்குளம் யுத்த காலத்தில் பெரிதும் பாதிப்படைந்து கவனிப்பாரற்று காணப்பட்டது. அங்கு ஆரம்பத்தில் சேறும் மண்ணும் காணப்பட்டன. மேலும் துர்நாற்றம் வீசி சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னரே, இது விடயம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனஞ்செலுத்தக் கூடியதாக இருந்தது. 2 வருடங்களுக்கு முன்னர் பொறியியல்துறை பணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகளுடன் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு விஜயம் செய்து, நிலைமையை நேரில் கண்டறிந்தார். அதற்கான புனரமைப்பு மதிப்பீட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி ஆளுநர், பொறியியல் துறை அதிகாரிகளுக்கு பணித்தார். யாழ் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கெ.கருணாநிதியிடம் இது குறித்த பணிப்புரைகளை வழங்கினார். அதற்கு அமைய புனரமைப்பு மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கேள்வி பத்திரம் முறையாக கோரப்பட்டு, புனரமைப்பு வேலைக்கான ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது. வட மாகாணம் மட்டுமல்ல நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் உள்ள சாதாரண அரச ஒப்பந்த நடைமுறைக்கு இணங்கவே இந்த செயல்பாடுகள் இடம்பெற்றன. இதன் அடிப்படையில் ஒப்பந்த வேலை பூர்த்தி செய்யப்பட்டது.

கடந்த 4 வருடங்களில் வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்கள் இவ்வாறே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளபபட்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன. அந்த செயல்திட்டங்கள் யாவும் மக்களுக்கு நல்ல பலனை தந்துள்ளன. இதனை மக்களே சான்று பகிர்வார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, புல்லுக்குளம் செயல்திட்டம் பற்றி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை உரிய ஆதாரத்துடன் நிருபிக்குமாறு ஆளுநர் சவால் விடுத்தார். அதனை விடுத்து அரசாங்கத்தின் துரித அபிவிருத்தியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் மேற்கொள்ளும் இத்தகைய நையாண்டி சேட்டைகளுக்கு தான் அடிபணிய போவதில்லை என்றும் ஆளுநர் கூறினார். அத்துடன் நாட்டிற்கு எதிராகவும் அரசாங்கத்திற்கெதிராகவும் செயற்படும் இத்தகைய தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என்று ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்தார். 35 வருட நேர்மையான இராணுவ சேவையை பூர்த்தி செய்து உயர் பதவியுடன் ஓய்வுபெற்ற தன் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி தெரிவித்தார். ஆதாரத்துடன் கூறப்படாத எந்த கருத்தும் பொய்யாகவே அமையும்.

வங்குரோத்து அரசியல் செய்யும் தனி நபர் அல்லது சிறு குழுக்களின் இந்த செயல்பாடுகள் வருந்தத்தக்கவை என்று ஆளுநர் கூறினார். அரசாங்கத்திற்கு எதிராக எந்த வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாத நிலையில் சில கதைகளை சோடித்து சில இணையத்தளங்கள் வெளியிடகின்றன. ”பொது மக்கள் கூறினர்” என்று அடையளாப்படுத்தப்படாத எழுவாய் பயன்பாடு – இதெல்லாம் கண் கட்டு வித்தை. உருப்படியான செய்திகள் இல்லாவிட்டால் உங்கள் செய்தி ஊடகங்களை மூடி விடுங்கள். மாறாக பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறோம். பொய்யான செய்தி நீண்ட காலம் நிலைக்காது. அதனை மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முடியாது.

ஊடக தர்மம் என்ற விதிமுறை ஒன்று உண்டு. அதனை மீறி செயல்பட வேண்டாம். இப்படி கீழ்த்தரமான செய்திகளை பிரசுரித்து பணம் சம்பாதிப்பதை விட பிச்சை எடுப்பது மேல். யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யாழ்மாவட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே இவர்கள், பிச்சைக்கார சமூகத்தினை தேடி வெளிமாவட்டங்களுக்கே செல்லவேண்டியிருக்கும். இதனையும் புதிய யாழ்ப்பாணம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய யாழ்ப்பாணத்தின் செயல்பாடு பழைய யாழ்ப்பாணத்தைவிட படு கேவலமான நிலைக்கு யாழ்ப்பாணத்தின் பெயரை இட்டு சென்றுவிடும். எனவே, யாழ் மக்களே ! புதிய யாழ்ப்பாணம் எனும் பெயரில் முழு யாழ்ப்பாணத்தையே குழி தோண்டி புதைக்கும் செயல்பாடுகள் குறித்து சற்று அவதானமாக இருங்கள்.

புதிய யாழ்ப்பாணம் எனும் பெயர் கொண்ட இணையத்தளம் “யாழ்ப்பாணம்” என்ற பெயருக்கே பாரிய இழுக்கை ஏற்படுத்துகிறது. இந்த பொய்யான செய்தி குறித்து தகவல் ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய குற்ற செயல் தொடர்பாக ஆராயும் உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.

எது எவ்வாறாக இருந்தாலும் ஆளுநரின் பணிப்புரைக்கமைய குறித்த இணையத்தளத்தில் வெளிவந்த புல்லுக்குளம் புனரமைப்பு தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts