யாழ்.புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில், பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த நெடுந்தீவைச் சேர்ந்த 19வயது இளைஞர் மீது பௌத்த பிக்கு (நயினாதீவு விகராதிபதி) ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.நேற்று மாலை 3மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த யோ.லோரன்ஸ் (வயது19) என்ற இளைஞர், நெடுந்தீவு சமாசத்திற்குச் சொந்தமான படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், நயினாதீவிலிருந்து குறித்த பிக்குவை ஏற்றிச் செல்வதற்காக வந்த படகு, துறையில் அணைக்கப்படுவதற்கு இடமில்லாமல் போனமையினால், நெடுந்தீவு படகை யார் அதிக நேரம் துறையில் நிற்க அனுமதித்தது என கடற்படையினருடன் பிக்கு முரண்பட்டுள்ளார்.பின்னர் நெடுந்தீவு படகிற்கருகில் சென்ற பிக்கு அங்கு பொருட்களைச் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞரை காலால் உதைத்து கீழே தள்ளியதுடன் கடும் வார்த்தைகளால் பேசி துரத்தித் துரத்தி அடித்துள்ளார்.
இதனால் குறித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இவை அனைத்தையும் அங்கு நின்ற தென்னிலங்கை சுற்றுலாப் பிரயாணிகளும்,ä கடற்படையினரும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.இதனையடுத்து, குறித்த பிக்கு கடற்படையினரை பார்த்து நெடுந்தீவுப் படகு 10 நிமிடங்களுக்கு மேல் குறிகட்டுவான் துறையில் நிற்கக்கூடாது என கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி யாழ். நெடுந்தீவுக்குப் பயணம் செய்யக் காத்திருந்த பயணி ஒருவரையே குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைத்து பிக்கு தாக்கியுள்ளார். குறிகாட்டுவான் நயினாதீவு சேவையில் ஈடுபடும் படகு பணியாளர் என நினைத்தே பௌத்த பிக்கு குறித்த நபரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இன்று(07.03.2012) குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான படகு சேவையில் ஈடுபடாமல் தமது எதிர்ப்புக் கண்டனத்தை வெளிப்படுத்த இருப்பதாக படகு உரிமையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கச்சதீவுச் சேவைக்கென எடுத்துவரப்பட்டிருந்த சொகுசுப் படகின் இயந்திரத்துக்குள் மண் போடப்பட்டதால் அந்தப் படகு சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படகு பிக்குவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.