யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுச் சான்றிதழ்கள் எடுப்பதற்கான விரைவுச் சேவை இல்லை!

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகத்திலும் இணைய ரீதியில் விரைவாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் மாத்திரம் அதனை தபால் மூலம் அனுப்பும் பழைய நடவடிக்கையை தொடர்ந்தும் பேணி வருகின்றது.

சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள், பிரதேச செயலகம் சென்று தங்கள் விண்ணப்பத்தைக் கொடுத்து உடனடியாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் முறையானது பிரதேச செயலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் முன்னர் போல விண்ணப் படிவத்துடன் சான்றிதழின் எத்தனை பிரதி வேண்டும் என்ற அளவுக்கு முத்திரையொட்டிய தபால் உறைகளை கொடுத்துவிட்டு வரவேண்டும். அவர்கள் சான்றிதழை தபால் மூலம் அனுப்புகின்றனர். இதனால் உடனடியாக சான்றிதழ் எடுக்கலாம் என நம்பியிருப்பவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.

இதனைவிட 3 பிறப்புச் சான்றிதழ்கள் தேவையென விண்ணப்பம் செய்யும் ஒருவருக்கு 1 மாத்திரம் அனுப்பிவிட்டு, மிகுதியை நேரில் சென்று கேட்டாலே வழங்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்கு புதிய நவீன வசதிகளுடனான கட்டடம் சுண்டுக்குழி – கச்சேரி வீதியில் அமைக்கப்பட்டுள்ள போதும், பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் பழைய பிரதேச செயலகம் அமைந்த கட்டடத்திலேயே இன்னமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts