Ad Widget

யாழ். பஸ்நிலைய தாக்குதலுக்குள்ளான தம்பதியரில் கணவன் மரணம்

யாழ். பஸ் நிலைய பகுதியில் மது போதையில் நின்ற ரவுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியரில் கணவன் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு10.30 மணியளவில் யாழ். பஸ் நிலையத்துக்குப் பின்பாக உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தியுள்ளனர். பின்பு அவர்கள் புறப்பட்ட வேளையில் அங்கு நின்ற ரவுடிக்கும்பல் அவர்கள் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த குறித்த தம்பதியர் அவர்களை திட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கு நின்ற கும்பல் அவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் கணவனுக்குத் தலை கழுத்துப்பகுதிகளில் பலமான காயம் ஏற்பட்டது. மனைவிக்கு பல பாகங்களில் காயமேற்பட்டது. இதனையடுத்து தாக்குதல்நடத்தியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் சம்பவ இடத்தில் நின்றவர்களால் மீட்கப்பட்ட தம்பதியர் யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வாரகாலமாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் கல்வி நிலையம் ஒன்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த மாதவமணிவண்ணன்(வயது44) என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தெகத்தின் பெயரில் கடந்த 21ஆம் திகதி நல்லூரடியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மண்கும்பானைச்சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதிவான் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை மன்றில் சமர்பிக்குமாறும் குற்றவியல் பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

Related Posts