யாழ் பல்கைலைக்கழக மாணவர் கொலை வழக்கை இடமாற்ற சட்ட மா அதிபர் எதிர்ப்பு

அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது யாழ் பிரதேசத்தில் நிலவும் அச்சுறுத்தல்கல் காரணமாக சந்தேக நபர்களுக்கு வழக்கறிஞர்களின் உதவியை நாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் வசிக்கும் வழக்கறிஞர்கள் யாழ் செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்ற காரணத்தினால் சந்தேகந பர்களுக்கு நியாயமான வழக்கு விசாரணையொன்றை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எனவே சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை வேறொரு நீதிம்ன்றத்திட்கு மாற்றும் படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச தரப்பின் வழக்கறிஞர் சந்தேக நபர்களின் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அவசியமானால் அதனை பெற்றுக்கொடுக்க போலிஸ் மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

சந்தேக நபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அரச தரப்பின் வழக்கறிஞர் அறிவித்தார்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுமென்று உத்தரவிட்டனர்.

Related Posts