பல்கலைக்கழகத்தின் மாணவிகளின் புதிய விடுதியில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் மின் ஒழுக்கு அல்ல. இருப்பினும் சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போது குறித்த விடுதியில் இருந்த மாணவிகளிற்கு மாற்று விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக் கழகத்தினில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்திற்குப் பாரிய சேதம் ஏற்பட்டதோடு நூற்றுக்கணக்கான மாணவிகள் பதற்றத்துடன் வீதியில் குவிந்தனர்.
குறித்த விடுதியில் இடது பக்கத்திலுள்ள கட்டிடத்தின் முதலாம் மாடியில் உள்ள 5ம் இலக்க அறையில் பரவிய தீயானது விடுதியின் ஏனைய அறைகளையும் பற்றிக்கொண்டது.
இதனையடுத்து உடனடியாக விடுதி நிர்வாகத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இவ்வாறு பரவிய தீயினை அடுத்து தீ பரவிய அறையுட்பட ஏனைய அறைகளிலும் பல மாணவிகள் சிக்குண்டு இருந்தனர். இருப்பினும் மாணவிகளை அறைகளை உடைத்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்திருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மோசமாக பரவியிருந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராடி தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இருந்த போதிலும் தீயின் வெப்பமானது தொடர்ந்தும் அதிகளவாக காணப்பட்டதுடன் தீ பரவிய அறை மற்றும் அதனை அண்டிய அறைகளின் சுவர்களில் தொடர்ச்சியாக பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் காணப்பட்டது.
தீ ஏற்பட்ட கட்டிடமானது புதிய கட்டிடமாக காணப்பட்டதாலும் தீயை அணைப்பதற்காக அதிகளவான நீர் பாய்ச்சப்பட்டதாலும் தொடர்ந்தும் இக் கட்டத்தில் வெடிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் விடுதியில் இருந்த மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இத் தீ விபத்தால் மாணவிகள் பலரது கணினிகள், கைத் தொலைபேசிகள் கல்வி ஆவணங்கள் உட்பட பல உடமைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் திருநெல்வேலிக் காவல்துறையினர் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகம் என்பன விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பினில் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்திடம் தொடர்பு கொண்டு கேட்டவேளையில் தீ ஏற்பட்டமைக்கான காரணமாக மின் ஒழுக்கு காணப்படாதபோதிலும் சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போது குறித்த விடுதியில் இருந்த மாணவிகளிற்கு மாற்று விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் சில மாணவிகளின் ஆடைகள் முழுமையாக அழிந்துள்ளமையினால் அவர்களிற்கு உடனடியாகவே நிர்வாகம் அதற்கான ஏற்பாட்டினையும் வழங்கியுள்ளதோடு தற்போது ஏற்பட்டுள்ள விடுதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பமாகவிருந்த ஒரு பீடத்தினை மேலும் ஒரு வாரம் ஒத்தி வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.