யாழ். பல்கலை மாணவியின் பெற்றோரது பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை காத்திருப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும் அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறப்பது தொடர்பில் படிப்படியாகவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு நாளையும் எவரும் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என்று பிரதிப் பதிவாளர், பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இராணுவச் சிப்பாயாகக் கடமையாற்றினார். அவருக்கு கோரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு நேற்று திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது.

சகோதரனுக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது சகோதரி கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை கம்பஹாவில் இருந்து மதவாச்சி வரை தொடருந்தில் வந்திறங்கி, அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சிக்கு வந்திறங்கியுள்ளார்.

அவர் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த போதும் கூட்டு கற்கை (Groun Study) சிற்றுண்டிச் சாலையில் உணவருந்தல் மற்றும் பரீட்சை மண்டபத்தில் ஏனைய மாணவர்களுடன் பழகியிருப்பார் என்ற சந்தேகம் சுகாதாரத் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

மாணவியின் உயிரியல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அதன் பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் மாணவியின் பெற்றோரது பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று மாலை வரை வெளியாகவில்லை. அதனால் மாணவியை தனிமைப்படுத்தலில் தொடர்ந்து வைத்திருக்க மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts