யாழ்.பல்கலை மாணவர் படுகொலை ; ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் இருவர் சார்ப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் கே. சயந்தன் மற்றும் எம். கணேஸ் முன்னிலையாகினர்

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 21 ஆம் திகதி இரவு, யாழ். பல்கலைக்கழக 3 ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர், கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஐந்து பொலிஸாரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதை தொடர்ந்து, யாழ். நீதவான் நீதிமன்றத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts