யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் தடியடி, இராணுவத்தினர் வயர் அடி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு தரப்பினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் உருவெடுத்துள்ளதை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்

இதனால் மாணவர்களில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை, செய்திச் சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததை கண்டித்து, இன்றைய தினம் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புத்துணி அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு விரைந்த சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார். பெருமளவானோர் வளாகத்திற்குள் ஓடி விட, சிலரை சாலையில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர்.

இரண்டாம் இணைப்பு

கைது செய்யப்பட்ட 5 மாணவர்கள் பதில் துணைவேந்தர் வேல்நம்பி தலைமையிலான குழுவினர் பொலிசாருடன் நடாத்திய பேச்சுக்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.அவர்களில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயம் ஏற்பட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்! . கலைந்து ஓடும்போது அகப்பட்டுக்கொண்ட நிராயுதபாணிகளான ஆண்பெண் மாணவர்கள் பொலிசார் பார்த்திருக்க இராணுவத்தினரால் வயர்களினால் தாக்கப்பட்டனர் அதனை பார்த்துக்கொண்டிருந்த விரிவுரையாளர்கள் தமது விசனத்தினை தெரிவித்தனர்.

கலைந்து உள்புறம் ஓடிய மாணவர்கள் கோபம் கொண்டு கற்களால் வீதியில் நின்ற இராணுவத்தினரையும் பொலிசாரையும் நோக்கி எறிந்தனர்.கெட்ட வார்த்தைகளினால் ஏசினர். அதற்கு ஆரம்பமாக மாணவர் மத்தியில் இருந்து கற்களை எறிந்த நபர்கள் சிலர் பின்னர் இராணுவத்தின் பக்கம் நின்றிருந்தாக மாணவர்கள் தெரிவித்தனர்.கலகமடக்கும்பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலுக்கும் தயாராக இருந்த போதிலும் சம்பவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது.இதேவேளை, மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து பொலிஸார் மீது மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பொலிஸ் புலனாய்வாளர் காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த சரவணபவன் எம்.பி இராணுவம் மற்றும் பொலிசாருடன் வாக்குவாதப்பட்டார் பி்ன்னர் பொலிசாரின் வற்புறுத்தலின் பேரில் சம்பவ இடத்தில் இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார். அவருடைய வாகனத்தின் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டதான செய்தி ஒன்றை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை

சம்பவத்தில் கலைந்து ஓடிய மாணவர்களால் தவறவிடப்பட்ட கைத்தொலைபேசிகள் சுலோக அட்டைகள் மற்றும் பாடக்குறிப்புக்கள் பொலிசாரால் கைப்பற்றபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பல்கலைக்கழக சூழல் மித மிஞ்சிய படைப் பிரசன்னத்தால், போர்க்களம் போல காட்சியளிக்கின்றது.

Related Posts