யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதே தமது நோக்கமென்றும் பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் குறித்த மூவரையும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் குறிப்பிட்டார்.

இருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான், மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Related Posts