யாழ். பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டமை பாரதூரமானது: மாவை சேனாதிராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூன்றாம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்ஷன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் காங்கேசன்துறை வீதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டிருப்பதான செய்தி எமக்குப் பேரதிர்ச்சியையும், வேதனையையும் தந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டினால் இம்மரணம் நிகழ்ந்திருக்கிறது என்றே அறிகின்றோம். இன்னும் மரண விசாரணை அறிக்கை வரவில்லை.

நான் யாழ்.மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களுடனும், அங்கு குவிந்திருந்த மாணவரிடமும் விசாரித்திருந்தேன். மாணவர்களின் கொலைக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி வழங்கினேன். அம்மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய ஏதுக்கள் ஏதுமில்லை.

பொலிஸாரின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இத்தகைய செயல்களை வன்மையாக அனைவரும் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும். பல்கலை மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவர்கள் கொலைக்கு, நம்பகத்தன்மை வாய்ந்த சட்டபூர்வமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நம்பகத் தன்மை வாய்ந்த நீதி விசாரணை உடன் ஆரம்பிக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறான குற்றங்கள், கொலைகள் நடைபெறாமல் ஜனாதிபதி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts