பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து திங்கட்கிழமை சாதகமான பதில் கிடைக்கபெறும் என ஜானாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலார்கள் கூட்டாக தெரிவித்ததாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து மாணவ பிரதிநிதிகள் ஜானதிபதியை சந்திப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு வந்திருந்தனர். எனினும் ஜனாதிபதியை சந்திக்க முடியாமையினால், ஜனாதிபதியின் செயலாளரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து மாணவ பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தனர்.
மேலும் தாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரை இன்று சந்தித்து மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்தனர்.
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நடைபெற்ற சம்பவத்தினை தாம் அவர்களிடம் விளக்கியதாகவும் தமது கோரிக்கையை கேட்டறிந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை குறித்து திங்கட்கிழமை சாதகமான பதில் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்களின் ஒளிப்படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.