வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 248 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 5 பேரும் உள்ளடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் கருவாடு கடை உரிமையாளர் கடந்த வாரம் கோவிட் -19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.