வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாகத் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.
‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ எனப் பெயரிடப்பட்டு வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்நிகழ்வுகள் கடந்த மாசி மாதம் 07ம் திகதி ஆரோக்கிய உணவு சமையல் போட்டியோடு ஆரம்பமாகி, அடுத்து எதிர்வரும் மாசி மாதம் 15ஆம் திகதி ஆரோக்கிய நடைப்பயணமும் , மாசி மாதம் 18,19,20ம் திகதிகளில் யாழ் மருத்துவப் பீடத்தில் மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சியும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் பி.எ. டினேஷ் கூஞ்ஞ தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் வியாழக்கிழமை (11-2-2016) பிற்பகல் இடம்பெற்ற ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ தோடர்பாக ஊடகவியலாளருக்கு விளக்கமளிக்கும் ஊடகச் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நவீன உலகில் நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகளில் மக்களின் இறப்பிற்கான முக்கிய காரணியாக தொற்றா நோய்களே தோற்றம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
தொற்றா நோய்களைப் பொறுத்தமட்டில் இதய நோய்கள், நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் புற்றுநோய்கள் மற்றும் சுவாச நோய்கள் பிரதான பங்கெடுக்கின்றன.
2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுகாதார அமைச்சின் வருடாந்த சுகாதார ஆய்வறிக்கையின் படி இலங்கையில் எண்பது சதவீதத்துக்கு அதிகமான வைத்தியசாலை இறப்புக்கள் தொற்றா நோய்களால் ஏற்பட்டவையாகும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின் படி தென்கிழக்காசிய நாடுகளில் இந்நோய்த்தாக்கத்தால் இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கும் மேற்குறிப்பிட்ட நோய்கள் பெரும்பாலும் பொதுவான ஆபத்துக்காரணிகளை தவிர்ப்பதன் மூலம் தடுக்கப்படக்கூடியதாக உள்ளதோடு இந்நோய்களை ஆரம்பத்தில் இனங்காண்பதன் மூலமும் சீரான உடற்பயிற்சி ஆரோக்கிய உணவுப்பழக்கங்கள் மற்றும் சிகிச்சைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
இதனைக் கருத்தில்கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ துறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாக தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.
ஆரோக்கிய நடை பயணம் மக்கள் நடைப்பயிச்சியிலீடுபடுவதை தூண்டுவதற்காகவும் தொற்றா நோய்களை தடுப்பதில் உடற் பயிற்சியின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப் படுகின்றது.
மேற்படி பவனி காலை- 08 மணிக்கு யாழ் பண்ணையிலுள்ள வடமாகாண சுகாதார பணிமனையில் ஆரம்பமாகி காலை 10 மணிக்கு யாழ் மருத்துவபீட விளையாட்டு மைதானத்தை வந்தடையும்.
எனவே பொது மக்கள் அனைவரும் இந்நடைப் பவனியில் பங்குபற்றிப் பயனடையுமாறு வேண்டப்படுகின்றனர்.
மருத்துவ பீடத்தில் மாசி மாதம் 18,19,20 ஆம் திகதிகளில் நடக்கவிருக்கும் மாகாண ஆரோக்கிய விழாவில் ஆரோக்கிய உணவுகள் சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் தயாரிப்பு முறைகள், சிறுவர்களுக்கான உணவு தயாரிக்கும் முறைகளும் பாரம்பரிய உணவு தாயாரிக்கும் முறைகளும் தொற்றா நோய்த் தடுப்பில் அவற்றின் பங்கு தொடர்பிலும் விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், இவ்வாறு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தவும் ஏற்பாடாகி இருக்கின்றது.
அத்துடன் இவ்வுணவு வகைகளை ருசித்துப் பார்பதற்கான அரிய சந்தர்பமும் மேலும் சேதன முறையிலான வீட்டுத் தோட்டம் அமைத்தல் பற்றி இவ்விழாவில் செயன்முறை உடற் பயிற்ச்சி மற்றும் வாழ்க்கைமுறை சீரமைப்பு இந்நோய்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கெடுக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு உடற் பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை சீரமைப்பு பயிற்சிகளும் கலந்து கொள்வோருக்குக் கிடைக்கும்.
ஆரம்பத்தில் இந்நோய்களைக் கண்டறிந்தால் குணப்படுத்துவது இலகுவானதாகும்.எனவே வருகை தரும் அனைவரும் தங்களைப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.
இவற்றை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடிவது ஒரு கொடையாகும். இதற்கான ஏற்பாடுகளையும்(Screening) ஏற்பாட்டுக்குழு சிறப்புற வடிவமைத்திருக்கிறது.
சிறுவர் முதற்கொண்டு வயோதிபர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற பலதரப்பட்ட ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் 6 தனித்தனி பிரிவுகளாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மேற்படி தினங்களில் காலை -10 மணி முதல் இரவு- 08 மணி வரை மேற்படி கண்காட்சி பிரமாண்டமாக நடைபெறுவதுடன் முற்றிலும் இலவசமாகக் காணவருபவர்கள் காட்சிகளை பார்வையிடமுடியும்.
இக்கண்காட்சியில் ஆரோக்கிய உணவு தயாரித்தல் மற்றும் வாழ்க்கை முறை மறுசீரமைப்பு அடங்கிய கையேடுகள் மற்றும் இருவட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அனைவரும் வருக பயன்பெறுக என்றார் .
இந்த ஊடக சந்திப்பில் யாழ்.பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடாதிபதி டாக்டர் எஸ். ரவிராஜ், யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எஸ் . சிவன்சுதன், சமூதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் என் . சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்ததுடன் மருத்துவ பீட மாணவர்களும் கலந்து கொண்டனர்.