யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த உடன்படிக்கையின் கீழ் இந்திய அரசாங்கம் இரண்டு பீடங்களுக்குமான செயன்முறை உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்கும்.
இதில் விரிவுரை மண்டபம் கணினி ஆய்வுக்கூடம் வாசிகசாலை நிர்வாக அலுவலகம் மாநாட்டு மண்டபம் போன்றவை உள்ளடங்கவுள்ளன.
இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.
ஏற்கனவே கலாசாரம் மற்றும் வரலாறு ரீதியான பிணைப்பை கொண்டுள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை இருநாட்டு உறவு வளர்ச்சிக்கு உதாரணமாக உள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.