யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக பேரவைக்கு முன்வைக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஸ்திரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கும் வகையில் இந்த நியமனத்தை செய்வதற்கான அனுமதியை வரும் 29ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழக பேரவையில் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கோரவுள்ளார் என்று அறியமுடிகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒவ்வொரு துணைவேந்தர் தெரிவின் போதும் அதில் போட்டியிடுவோர் தாம் துணைவேந்தராகத் தெரிவானதும் பிரதித் துணைவேந்தர் ஒருவரை முன்மொழிந்து பல்கலைக்கழக நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுப்போம் என்று பேரவை முன் உரையாற்றுவர்.
எனினும் எந்தவொரு துணைவேந்தரும் பதவிக்கு வந்த பின்னர் பிரதித் துணைவேந்தரை நியமிப்பதற்கான அனுமதியை பேரவையிடம் கோருவதில்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, தகுதிவாய்ந்த அதிகாரியாக உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைகளை சீர்செய்யும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிக்கவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியும் கடந்த துணைவேந்தர் தெரிவின் போது போட்டியிட்டு பேரவையின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றவருமான பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவை பிரதித் துணைவேந்தராக நியமிக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார்.
தனது பரிந்துரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் அனுமதிக்காக அவர் சமர்ப்பிக்கவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை வரும் ஜூன் 29ஆம் திகதி கூடுகின்றது. பேரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதும் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.