பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது உயிர் ஆபத்துக்களையோ விளைவிக்கும் நோக்கில் பொலிஸாரை கடமையில் அமர்த்தவில்லை என்றும், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக்குப் பின்னர், அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாரை நீக்கக் கோரினால், பொலிஸாரை அங்கிருந்து நீக்குவோம்.
ஆனால், பொலிஸார் தொலைவில் இருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். இந்த பாதுகாப்பு மாணவர்களையும், அரச சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படும்’ என்றார்.
மேலும் ‘யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தாம் கைது செய்யவில்லை என தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பான விளக்கம் என்ன?’ என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு ”யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.