யாழ்.பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு மீள விண்ணப்பங்கோரத் திட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாகக் கோரப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறியவருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களைப் பயன்படுத்தி துணைவேந்தர் பதவிக்கு முன்னைய பேரவைக் காலத்தில் கோரப்பட்ட விண்ணப்பத்தை வலுவற்றதாக்கி, புதிதாக விண்ணப்பங்களைக் கோருவதற்கான முன்மொழிவை அடுத்து வரும் நாள்களில் இடம்பெறவுள்ள புதிய பேரவையின் முதலாவது கூட்டத்தில் முன்மொழிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நம்பகரமான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

1978 ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கமைவாகவும், பல்கலைக்கழக தாபன விதிக் கோவைக்கமைவாகவும் கோரப்பட்ட விளம்பரத்துக்கமைவாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களிலிருந்து, குறித்த காலப் பகுதியில் பதவியில் இருக்கும் பல்கலைக்கழகப் பேரவை தேர்தல் ஒன்றின் மூலம் முன்னுரிமை பெறும் மூவரது பெயர்களைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யும். பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களிலிருந்து ஒருவரை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, 1978 ஆம் ஆண்டு, 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதி சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி நியமிப்பதே நடைமுறையாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்ரோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உள்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தததையடுத்து துணைவேந்தர் தெரிவுக்கான பணிகளை கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின், துணைவேந்தர் தெரிவுக்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய பல்கலைக்கழக நிர்வாகம் முதற்கட்டமாக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ஒன்பது பேரினதும் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை கடந்த வருடம் நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில் நியமித்ததுடன், துணைவேந்தர் தேர்தலை டிசெம்பர் 28ஆம் திகதி நடாத்துவதற்கு திகதியும் குறித்திருந்தது.

இந்த நிலையில், புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் டிசெம்பர் 20 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவைகள் வலுவிழக்கச் செய்யப்பட்டதனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவும் இழுபறிக்குள்ளாகியது.

தற்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் புதிய தலைவர், உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகங்களுக்கான பேரவை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களைப் பயன்படுத்தி துணைவேந்தர் பதவிக்கு முன்னைய பேரவைக் காலத்தில் கோரப்பட்ட விண்ணப்பத்தை வலுவற்றதாக்கி, புதிதாக விண்ணப்பங்களைக் கோருவதற்கான முன்மொழிவை அடுத்து வரும் நாள்களில் இடம்பெறவுள்ள புதிய பேரவையின் முதலாவது கூட்டத்தில் முன்மொழிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நம்பகரமான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு உயர்கல்வி அமைச்சரால் பதவி நீடிப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பதில் துணைவேந்தரை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதடிப்படையில் முதுநிலை பீடாதிபதி என்ற அடிப்படையில் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தனை பதில் துணைவேந்தராக நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுப்பதாக அறியமுடிகிறது.

முன்னைய பேரவையினால் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பிரதித் துணைவேந்தர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பேராசிரியர் கு.மிகுந்தன் ஆகியோரில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைப் பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அறிவுரையை முன்னைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த போதிலும் நவம்பர் 26 ஆம் திகதி முதல் புதிய நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Related Posts