யாழ். பல்கலையில் 353 விரிவுரையாளர்களுக்கு வெற்றிடம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் 353 நிரந்தர விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே உயர்கல்வி அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது 8 பீடங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 53 திணைக்களங்கள் இயங்கி வருகின்றன. விவசாய திணைக்களத்தில் 41 நிரந்தர விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டும். எனினும் குறித்த பிரிவில் 16 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

கலைப்பிரிவில் 194 நிரந்தர விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டும். அங்கு 65 நிரந்தர விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன.

அதேபோன்று பொயிறியல் திணைக்களத்தில் 28 வெற்றிடங்களும், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வர்த்தகப் பிரிவில் 13 வெற்றிடங்களும், மருத்துவப் பிரிவில் 33 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. அத்தோடு, விஞ்ஞான பிரிவில் 27 வெற்றிடங்களும், தொழில்நுட்பப் பிரிவில் 18 வெற்றிடங்களும் காணப்படுகின்றன.

மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் விடுதி பிரச்சினைக்கு எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.

Related Posts