அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான படங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளது. இருப்பினும் எம்மால் இவை உறுதிப்படுத்த முடியவில்லை
நேற்றய தினம் பல்கலை வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப்பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை நேற்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தில் மாவீரர் ஈகைச்சுடர் நேற்று 6.15 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளது. இவ் கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.உதயன் பத்திரிகை நிலையத்தில் வாசலில் வைக்கப்பட்டிருந்த தீபங்கள் பின்னர் பொலிசாரின் அறிவுறுத்தலின்பேரில் அகற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை மக்கள் தமது வீடுகளில் அமைதியாக தீபமேற்றினர் என்பதை சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் படங்களில் இருந்து அறிய முடிகிறது
முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.