யாழ். பல்கலையில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்!

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஆரம்பமாகியது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை கோரி கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts