யாழ்.பல்கலையில் பொங்குதமிழ் பிரகடன நினைத்தூபி திரைநீக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி இன்று (17) திங்கட்கிழமை காலை திரைநீக்கம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து நடத்தும் “தமிழமுதம்” மாபெரும் தமிழ் விழாவின் ஒரு அங்கமாகவே “பொங்குதமிழ்” தமிழரின் வரலாற்று பதிவு நிகழ்வின் நினைவுத் தூபி திரைநீக்கம் செய்யப்பட்டது.

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை கலைநிகழ்வுகள் மூலம் உலக அரங்கில் முன்வைத்து பொங்கு தமிழ் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் 2001ஆம் ஆண்டு முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது.

தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் ஆகியவற்றை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பொங்குதமிழ் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பொங்குதமிழ் நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பலகை 17 ஆண்டுகள் பழமையானதால், அதனை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பொங்குதமிழ் நினைவுத்தூபியை அமைக்கும் பணிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நடப்பு வருட மாணவர் ஒன்றியம் முன்னெடுத்தது.

நினைவுத் தூபியின் நடுவே பொங்குதமிழ் பிரகடனத்தைப் பொறித்த கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.

Related Posts