தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) தமிழர் தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது.
அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்துக்கு ஆதரவாக தமிழீழ மக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’- என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
பெரும் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் ஒரு சாதாரணப் பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அகிம்சை வழியில் ஆரம்பிப்பதற்கு எத்துணை நெஞ்சுரமும் தியாக மனப்பான்மையும் அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.
“எம்மைப் பாதுகாக்கவென வந்த இந்தியா இன்று சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். இதனைத் தடுக்கலாம் என்ற உறுதியுடன் நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். வீரச்சாவுகளை கண்டு நாம் பழகிப் போனவர்களே. எனது இறப்பை அடுத்தும், எமது நோக்கை நாம் அடைவோம் ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது” என்று அன்னை பூபதி தியாக உணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உணவு ஓறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி, இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் கலந்து பரவியது. முப்பத்தியொரு நீண்ட நாள்கள்.
திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு சாதாரணத் தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தன.
தியாக தீபம் அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் முதன்மைச் சுடரேற்றனார். மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்டவர்களும் சுடரேற்றினர். அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்த்தினர்.