யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர் விரிவுரைகளும் ஒன்லைனில் நடக்கிறது.
ராகிங்கும் ஒன்லைனிற்கு சென்றுள்ளது. பலாலி இராணுவ முகாமில் லெப்டினனட் தர அதிகாரியாக உள்ள உளவியல் பெண் வைத்தியர் ஒருவரின் சகோதரனும் ராகிங் செய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை தெரிவித்தார்.
சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள். பொது இடத்தில் சொல்ல முடியாதது. சட்டையை கழற்றி உடம்பை காட்டுவது மாத்திரமல்ல. அதற்கு மேலாகவும் கேட்கப்பட்டது. அது கிட்டத்தட்ட “நீலவான நிகழ்வுகளை” எல்லாம் முழுக்க பார்ப்பதை போல.
உனது அக்கா பலாலியில் இராணுவத்தில் இருக்கிறார்தானே என்றும் ராகிங்கில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை.
ஏற்கனவே பல்கலகழகத்தில் நடந்த மோதல் ஒன்றில், அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டினேன். பல்கலைக்கழகத்திற்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளனர்.
பகிடிவதையை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் இந்த சம்பவம் நடந்தால், பீடாதிபதி எமக்கு அறிவிப்பார்.
சிரேஷ்ட மாணவ ஆலோசகர், பிரதி சட்ட ஒழுக்காற்று அதிகாரி ஆகியோர் பீடாதிபதியுடன் இணைந்து அந்த விடயம் தொடர்பான ஆரம்ப அறிக்கையை 2 நாட்களிற்குள் வழங்க வேண்டும்.
அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை வழங்குவோம். அவர்கள் குற்றத்தின் அடிப்படையில் விடுதியிலிருந்தும், வகுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்கள்.
மாணவர்கள் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். மாணவர் ஒழுக்காற்று சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்த குழு, மாணவனின் விளக்கத்தை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்குவார்கள்.
சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு பட்டங்கள் பெற முடியாது, 4ஆம் வருட கற்கையில் ஈடுபட முடியாது, சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்து கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வணிக, முகாமைத்துவ பீட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் கருத்து தெரிவித்தபோது, நாங்கள் மிக வேகமாக ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளோம்.
அந்த விசாரணையின் அடிப்படையில் 10 மணித்தியால விசாரணையில் சந்தேகத்திற்குரிய 2ஆம் வருடத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வகுப்பு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிற்கு உதவியதற்காக – விசாரணையை நம்பக தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த இம்சையில் ஈடுபட்டவர்களிற்கு சிறப்பு கற்கை நெறி வழங்கப்படாது, ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.