யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்கள் புறக்கணிப்பு

நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சில பல்கலைக்கழகங்கள் இன்று (புதன்கிழமை) மீள திறக்கப்படவுள்ளன.

குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகிய பாடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

எனினும், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை எழுத்து மூலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்தோடு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் பீடம், மருத்துவ பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாயம் பீடத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கல்வி ஆண்டு மாணவர்களின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளும் இன்று அரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது

அத்தோடு கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related Posts