யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் இன்றுகாலை 8.00 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டது.இத்திறப்பு நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
மேற்படி விவசாய பீடமானது கடந்த யுத்தம் காரணமாக 1995ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அக்கால கட்டத்தில் புலிகளின் பாவனையிலிருந்த மேற்படி விவசாய பீடத்தின் வளாகம் யுத்த முடிவிற்குப் பின்னர் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட கடும் முயற்சியின் பயனாக மேற்படி பீடம் அமைந்துள்ள காணி பல்கலைக்கழக பயன்பாட்டிற்கென மீளப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்று திறந்து வைக்கப்பட்ட விவசாய பீடத்துடன் இக்காணியில் பொறியியற் பீடமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், திட்டப்பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி திருமதி சிவச்சந்திரன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண சபை உறுப்பினர் தவநாதன், மாணவர்கள், உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.