யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியமையால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அச்சவுணர்வு ஏற்பட்டுள்ளது.
‘மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது’ என்று தலையங்கம் இடப்பட்டிருந்த மேற்படித் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவை வருமாறு:-
அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றது. பேராசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளாக அமைகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
கலைப்பீட பீடாதிபதி சிவநாதன் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், மாணவர் ஒன்றியத் தலைவர் சுபாபர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கோமேஸ், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் வேணுகோபன் ஆகியோர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது. எனவே பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் உங்களுடைய உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது. – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் எந்தத் தரப்பினரால் இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவுதினம் எதிர்வரும் 17,18 ஆம் திகதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது என்று நம்ப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி