யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கு திறப்பு

யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு துணைவேந்தரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது எழுந்துள்ள கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது.

தற்போதைய துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமாகிய பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட திட்டமுன் மொழிவுக்கமைய 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணத்தினால் அடிக்கல் நாட்டப்பட்டுநிறைவு செய்யப்பட்ட கட்டடத் தொகுதி 2020 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு சர்வதேசத் தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டுள்ளது.

பேராதனை மற்றும் ருகுண பல்கலைக்கழகங்களில் உள்ளக விளையாட்டரங்குகள் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் வேறெந்தப் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு இது வரை அமைக்கப்படவில்லை. சுமார் இருநூற்றி எட்டு மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழாநிகழ்வுபல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கல்வெட்டைத் திறந்து வைக்க யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமல்லாமல், தேவைநாடும் சகலரும் இந்த உள்ளக விளையாட்டரங்கைப் பயன்படுத்துவதற்கேற்ற முறையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து, அனுமதி பெற்று இங்குள்ள உள்ளக விளையாட்டு வசதிகளை விளையாட்டுத்துறை சார்ந்தோர் பயன்படுத்த முடியும் என்று

இதே நேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கின் இடப்பற்றாக்குறை காரணமாகப் பல அமர்வுகளாக நடாத்தப்படும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவினை இம்முறை ஒரே நாளில் இந்த அரங்கில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts