யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது.
வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உறவுகள் ஆகியோரை நினைவு கூருவதற்கு, நினைவாலயம் ஒன்றை பல்கலைக்கழக வளாக முன்றலில் அமைக்க மாணவர்கள் திட்டமிட்டமிட்டு கடந்த 18 ஆம் திகதி அதன் பணிகளை ஆரம்பித்தனர்.
இருப்பினும் பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்பால் தடங்கல் ஏற்படுத்தப்பட்டது.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த 19 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த நினைவாலயத்தை பல்கலைக்கழக வளாகத்திலுளள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறு உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் பல்கலைக்கழக வளாகத்தின் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் நேற்று இடை நிறுத்தப்பட்டது.