யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்றையதினம் (புதன்கிழமை) குருந்தூர்மலையில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது.

ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Posts