யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் கைது – மாணவர்கள் மத்தியில் பதற்றம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் எனக் கூறிக்கொண்டு இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், மருத்துவபீட வளாகம், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்த படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் படங்கள் உள்ளிட்டவற்றை மீட்டனர்.

இதனையடுத்தே மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பணம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதிகள் மீதான இராணுவச் சோதனை நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்ந நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Related Posts