யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூன்றாவது நாளாகவும் நிர்வாக முடக்கல் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று முதல் இடைநிறுத்தியிருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் மாணவர்கள் தமது நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 37வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களிற்கு ஆதரவாக கடந்த திங்கட்கிழமை முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினை முடக்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்

பல்கலைக்கழக நுழைவாயில்களை முடக்கி நிர்வாகத்தினை இயங்கவிடாது மாணவர்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவரும் நிலையில் பலகலைக்கழக நிர்வாகத்தினர் குறித்த மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினை சூழவுள்ள பீடங்களான கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய மூன்றினதும் கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்த நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

குறிப்பிட்ட பீடங்களின் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடைவிதிக்கப்பட்டதுடன் விடுதிகளில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.

இதை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தமது நிர்வாக முடக்கல் போராட்டத்தினை இன்று மூன்றாவது நாளாகவும் மேற்கொண்டு வருகின்றனர்

பல்கலைக்கழகத்திற்குள் யாரும் நுழைந்து விடாதவகையில் வாசல்களை அடைத்து மாணவர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர். இதனால், மூன்றாவது நாளாகவும் பல்கலைகக்கழகத்தின் சகல பீடங்களும் இயங்காததுடன் நிர்வாக அலகும் செயலிழந்துள்ளது.

குறித்த கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்படும் என உறுதியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை தொடரப்போவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts