யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை: சந்தேகநபர்களுக்கு பிணை!!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர்கள் ஐவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிய விண்ணப்பம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் ஐவரும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும், தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி இரவு, யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நிலையில் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்களின் கொலை தொடர்பான சாட்சியங்கள், பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டதாகவும், பொய்யான தகவல்களை வழங்கி வழக்கை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

Related Posts