யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைப்பதுடன், மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவர்களில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தில் ஐந்து பொலிஸார் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி செய்த சைகையை மீறிச் சென்றதனால், பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால் தடம் மாறிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த மாணவர்களில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.