யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது வவுனியாவில் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவன் மீது பெருன்பான்மை இனத்தினை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவன் (வயது – 22) தங்கியிருந்த விடுதிக்கு இரவு வந்த இரண்டாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவர்கள், தாக்குதல் மேற்கொண்டு விட்டு சென்றுள்ளனர்.

இதன் போது காயமடைந்த மாணவனை அவரது சக நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். இதன் போது, நீங்கள் விடுதலைப்புலிகள், ஆகையால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பெருன்பான்மை இன மாணவர்கள் பணித்துள்ளனர்.

இதன் போது அவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்றவுடன் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்த மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாணவனை அவரது நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவனுக்கு நெஞ்சு, வாய் பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts