மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார்.
குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர் கள ஆய்வின் நிமித்தம் கீரி கடற்கரைக்கு நேற்று (புதன்கிழமை) சென்றுள்ளார்.
அப்போது, கரையொதுங்கியிருந்த பெருமளவான கழிவுப்பொருட்களை சேரித்து ஒரு இடத்தில் குவித்து வைத்ததோடு, மன்னார் நகர சபையுடன் தொடர்பு கொண்டு தான் சேகரித்த கழிவுப்பொருட்களை அகற்றிச் செல்லுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கழிவுகளால் அவதியுற்று வந்த பிரதேச மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இப்பணி நன்மையளித்துள்ள நிலையில், மாணவனின் சேவைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இயற்கை எழில்கொஞ்சும் கீரி கடற்கரையானது சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் இடமாக காணப்படுகின்றது. இந்நிலையில், அதனை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.