இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த கிளையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 7 கோடி ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விடயத்தை வங்கி நிர்வாகம் ஊடகங்களுக்கு கசியவிடாது பார்த்துக் கொண்டது. எனினும் விடயம் ஊடங்களுக்கு இன்று மாலை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, யாழ். குடாநாட்டில் இயங்கும், சில ஊடகங்களின் முதலாளிகளுடன் தொடர்பு கொண்ட வங்கி நிர்வாகம் குறித்த செய்தி வெளியிடப்பட்டால் மக்கள் வங்கி மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும். எனவே அவ்வாறு ஏதேனும் நடந்தால், எங்கள் விளம்பரங்கள் உங்களுக்கு கிடையாது என கூறியுள்ளது.
அதனையடுத்து, செய்தியை தணிக்கை செய்ய அந்த ஊடக நிர்வாகங்கள், ஆசிரிய பீடத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தின்போது பெருமளவு மக்கள் தாங்கள் அடகு வைத்த நகைகளின் அத்தாட்சித் துண்டுகளை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், யுத்தத்தின் பின்னர் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அவற்றை மீட்க முயற்சித்தபோதும், அந்த மக்களுக்கு அவை கிடைக்கவில்லை. குறிப்பாக புதுக்குடியிருப்பில் 5 பவுண் நகையை 23 ஆயிரத்திற்கு 2008ம் ஆண்டு பெண்ணொருவர் அடகு வைத்துள்ளார்.
ஆனால் அதற்கான அத்தாட்சித் துண்டை யுத்தகாலத்தில் தொலைத்துவிட்டு, யுத்தத்தின் பின்னர் அந்த நகையினை மீட்பதற்கு குறித்த மக்கள் வங்கியின் கொழும்பு தலைமையகம் வரையில் ஏறியிறங்கியிருக்கின்றார். ஆனால் இன்றுவரை அந்த நகை அவருக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு பல சம்பவங்கள் இந்த வங்கியினால் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏனைய வங்கிகள் மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு அவர்களுடைய நகைகளை வழங்கியிருக்கின்றது.