யாழ் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு முன்புறமாக உள்ள வாயிலில் பல்கலைக்கழகத்துக்கான புதிய நுழைவாயில் கட்டப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது கொழும்பு சுகதாச விளையாட்டரங்கு முகப்பு போல என ஒரு சாராரும் தலதாமாளிகையில் உள்ளவாறானது மாதிரி என ஒரு சாராரும் கூறுகின்றனர் இது தொடர்பிலான மாதிரிப்படம் வெளிவராத நிலையில் இவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை.
அதற்காக அங்கு நின்ற இரு பெருமரங்கள் 5.11.2016 அன்று வெட்டிச்சாய்க்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் மரமொன்றை சுற்றி புதிதாக அமைக்கப்பட்டிருந்த கல் இருக்கையும் உடைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயம் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் அதற்கு நேர் எதிராக உள்ள வாயிலில் நுழைவாயில் அமைக்கப்படுகிறது.
தற்போது புனரமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக பரமேஸ்வரன் ஆலய தர்மகர்த்தா பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் இருக்கின்ற நிலையில் இது தொடர்பில் தவறு நடைபெறாது என்று பலரும் கூறுகின்றபோதிலும் அது தொடர்பிலான உண்மையான தகவல்கள் வெளிவராத நிலையில் பல்வேறுவிதமான ஊகச்செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் மாதிரிப்படத்தை வெளியிடப்படும் வரை இந்த ஊகங்கள் இருக்கவே செய்யும் என பெயர் குறிப்பிட விரும்பாத பல்கலைக்கழக பிரமுகர் ஒருவர் எமது தளத்துக்கு தெரிவித்தார்.
தற்போது நவம்பர் மாதம் வட மாகாணசபையால் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய மரங்களை நுழைவாயில் அமைக்க தறிப்பது பல்கலைக்கழகம் ஒன்றுக்கு பொருத்தமான செயலானதா என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.