யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த 27ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கெண்டதைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்கள் அரைநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இது குறித்து யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் நேற்று மாலை செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டிருந்தது.
அதன் விவரம் வருமாறு :
“நேற்று முன்தினமும், நேற்றும் (27.11.2012, 28.11.2012) பல்கலைக்கழக பிரதான வளாகம், மருத்துவபீடம், மாணவர் விடுதிகள் ஆகியவற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குரியதாக்கியுள்ளது.
இந்த இரு தினங்களிலும் முழு நேர அலுவலர்களான பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரும், பிரதிப் பதிவாளரும் குடாநாட்டில் இல்லாமை நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கின்றது.
பேராசிரியர் அமரர் துரைராஜா அவர்களின் முன் முயற்சியுடன் சகல பல்கலைக்கழக சமூகத்தவரும் இணைந்து 1980 களில் உருவாக்கிய செயற்பாட்டுக்குழு செயலிழந்து போனமையும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைச் சிக்கலாக்கியுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணியிலிருந்து அரைநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு சகல ஊழியர்களையும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டியிருக்கின்றது.” என்றுள்ளது.