யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வாரம் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மாணவர்கள் வருகைதராவிட்டாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமது விரிவுரைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.எனினும் வெலிக்கந்தை புனர்வாழ்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை விரிவுரைகளை பகிஸ்கரிப்பது என்ற மாணவர்களின் தீர்மானத்தில் இன்னும் மாற்றங்கள் தென்படவில்லை.
இதற்கிடையில் மாணவர்கள் தவறு இழைத்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து விடுவிக்கவேண்டும் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது இவ்வாறிருக்க யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதாலாம் வருட மாணவர்களுக்கான முதலாம் அரையாண்டு பரீட்சைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகின்றன எனவும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் மிகவிரைவில் ஆரம்பமாகின்றன எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து மாணவர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகம் கலந்துரையாடிய போதும் மாணவர்கள் தமது முடிவில் உறுதியாகவுள்ளனர்.சக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்த வகுப்பு பகிஷ்கரிப்புத்தான் ஒரே வழியாக உள்ளது என அவர்கள் நிர்வாகத்தினரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகம் ஒன்றுக்கு கூறியபோது:”குறித்த பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எப்போது ஆரம்பாகும் என்பதை இப்போதைக்குக் என்னால் கூற முடியாது. மாணவர்கள் தொடர்ந்து வகுப்புக்களை பகிஷ்கரித்து வருகின்றனர். எனவே, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் மீண்டும் ஒரு தடவை கலந்துரையாடிய பின்னர்தான் இது குறித்துக் கூறமுடியும். இதைவிட வேறு எதனையும் நான் கூற விரும்பவில்லை” என்றார்.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் உள்ள மாணவர்களின் விடுதலை தொடர்பாக தங்கள் நடவடிக்கை என்ன? என்று கேட்கப்பட்டதற்கு “தடுப்பில் உள்ள மாணவர்களின் விடுதலை குறித்து கருத்து எதனையும் நான் கூறமாட்டேன். இது தொடர்பாக என்னிடம் கேள்விகளைக் கேட்கவேண்டாம் ” என்று துணைவேந்தர் பதிலளித்தார்.