யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர்.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

இவர்களோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி எஸ். சிறீசற்குணராஜா, வேல்நம்பி ஆகியோர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

மேலும், இவர்களைவிட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவ கலாநிதி எஸ். ரவிராஜ், பேராசிரியர்கள் பி. ரவிராஜன், கே. மிகுந்தன் ஆகியோர் தமது விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்கவிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

இதேவேளை, கடந்த 23 நாள்களாக நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருவதனால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்படுமா என்பது குறித்த சர்ச்சை ஒன்று நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts