யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது.

உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களையும் பெற்றிருந்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே மாதம் 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந.தனேந்திரனுடையது. உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ.இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆறு பேரிலிருந்து ஐந்து பேரைத் தெரிவு செய்வதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவருடன், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேரவையினால் முன்மொழியப்பட்ட இருவரையும் கொண்ட, மதிப்பீட்டுக்குழு நேற்றுக் காலை கூடியது.

இந்த மதிப்பீட்டுக்குழு ஒவ்வொரு விண்ணப்பதாரிகளாலும் தனித்தனியாக குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளையும் மதிப்பீடு செய்த பின்னர் புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ.இளங்குமரன் புள்ளிகளின் அடிப்படையில் 6ஆவது இடத்தைப் பெற்ற நிலையில் ஏனைய 5 பேரின் பெயர்கள் நேற்றுப் பிற்பகல் பேரவைக்கு முன்மொழியப்பட்டது.

மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களால் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும், தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டதைப் போலவே, ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளையும் சுற்றறிக்கையின் படி தனித்தனியாக மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர்.

சுயாதீன மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களின் தனித்தனி மதிப்பீட்டுப் புள்ளிகள், பேரவை உறுப்பினர்களின் தனித்தனி மதிப்பீட்டுப் புள்ளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெறும் திறமைப் பட்டியல் பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஊடாகத் தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு முன்வைக்கும்.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருவரைத் தெரிவுசெய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts