யாழ். பல்கலைக்கழக தீர்மானத்தால் வெளிவாரிப் பரீட்சார்த்திகள் விசனம்!

கொரோனாப்பெருந் தொற்று அபாயத்தையடுத்து நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களம் இம்மாதம் நடாத்தவிருந்த சகல பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ள நிலையிலும், பல்கலைக் கழகங்களின் விரிவுரைகளை ஒன்லைன் மூலமாக நடாத்துவதற்குப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) கற்கைநெறியின் 3 ஆம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக – மாவட்டங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், சில பிரதேசங்கள் முடக்கப்பட்டிருப்பதனாலும் பரீட்சைக்கு வருவதிலிருந்து தாம் பல சிரமங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும், சுகாதார அச்சுறுத்தல் காரணமாகத் தாங்கள் பரீட்சைக்குத் தோற்றத் தவறி, கடந்த மாதம் இடம் பெற்ற கலைமாணிப் பரீட்சையைப் போல ஒரு சில பரீட்சார்த்திகள் மாத்திரம் பரீட்சைக்கு வந்து, பரீட்சை நடத்தப்பட்டால் தமது வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருப்பதாகவும் பரீட்சார்த்திகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதும், நாட்டு நிலைமையைப் பற்றி எந்தவிதமான கரிசனையும் இன்றி, “பரீட்சை நடைபெறும், வராமல் விட்டால் உங்கள் வாய்ப்புத் தான் வீணாகும்” என்று பதிலளித்தமை தமக்குக் கவலையளிப்பதாகப் பரீட்சார்த்திகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts