யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து இராணுவமும் பொலிஸாரும் நடத்திய இரண்டு நாள்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.
இந்தத் தாக்குதல்கள் மாணவர்கள் மீதான தாக்குதல் மட்டுமன்றி அனைத்துத் தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பதற்கான கொடூரத் தாக்குதலாகும். இது தமிழ் மக்கள் மீதான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை நீடிக்கப்பட்டு வருவதையே வெளிக்காட்டியுள்ளது.
இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாணவர்கள் தமக்கான பாதுகாப்பு, சுதந்திரமான கற்றல், பல்கலைக்கழக சுற்றாடலில் இருந்து பாதுகாப்புப் படைகளை விலகச் செய்தல் போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதை நாம் ஆதரிக்கின்றோம். மாணவ, மாணவிகளின் விடுதிகளுக்குள் பலாத்காரமாகப் புகுந்து அநாகரிகமான வழிகளில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
இதனை மறுநாள் மாணவர்கள் அனைவரும் கண்டித்து கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். அமைதியாக நடத்திய அந்தப் போராட்டம் ஜனநாயக ரீதியானது. அதனைத் தடுத்தே மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தாக்குதல் இடம்பெற்ற வேளை அங்கு வந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தூஷிக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று உதயன் நாளிதழின் ஆசிரியர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
இவை அனைத்தும் அரசினதும் பாதுகாப்புப் படையினதும் தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டையே தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. என்றுள்ளது.