யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்குள் கைகலப்பு – நால்வர் காயம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பாடு நீடித்த நிலையில் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைகலப்பில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களின் மோதலைத் தடுக்க முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரமேஸ்வராச் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் இடம்பெற்றதால், அதில் தலையீடு செய்யாத பல்கலைக்கழக நிர்வாகம் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts