யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!- கொடும்பாவியும் எரிப்பு

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு, இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.குறித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் குதித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பெயர் பொறித்த கொடும்பாவியை எரித்து யாழ்.பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரியும், சம்பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள உயர்வுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் பல்கலைக்கழக ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் கடந்த 6ஆம் திகதி தொடக்கம் பணிபுறகணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.இதற்கு ஆதரவு தெரிவித்தே கொடும்பாவியை யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எரித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை யாழ். பல்கலைக்கழக முன்றலில் கூடிய கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பெயர் பொறிக்கப்பட்ட கொடும்பாவையை கட்டி, இராஜமேளம் (பறை) முழங்க பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலக வாயிலில் இருந்து ஊர்வலமாகக் கொடும்பாவியை இழுத்து கொண்டு சென்று பல்கலைக்கழகப் பிரதான வாயிலில் தீயிட்டுக் கொழுத்தினர்.

Related Posts