யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார்!!

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே தாம் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தங்களிடம் தெரிவித்ததாக மாணவர்கள் குறிப்பிட்டுகின்றனர்.

எனினும் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை எனவும், தமது சக நண்பர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கான ஆயத்தங்களிலேயே தாம் ஈடுபட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயதம் தாங்கிய நிலையில் வருகைத்தந்த பொலிஸார் மாணவர் தலைவர் உள்ளிட்ட சிலரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்துகொண்டதோடு ஏனைய மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் அமைதியாக பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்ட தம்மிடம் ஆயுத் தாங்கிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமை ஒருவகை அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts