யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டமைக்கு ஈ.பி.டி.பி கண்டனம்

EPDP flagயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில் அதனைக் கண்டிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணக் கல்வி சமூகத்தின் திறவு கோலாக விளங்கும் யாழ்.பல்கலைக்கழகம் எந்த விதமான காரணங்களுமின்றி வரும் வாரம் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக பல்கலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலைப்பாடானது, மீண்டும் எமது மாணவர் சமூகத்தை சீரழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் வழிகோலாகவே கருதவேண்டியுள்ளது. இத்தகைய காரணமற்ற மூடுதலை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுமூகமான சூழலியலில் சுதந்திரமாக தமது கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இந்த உயர்கல்வி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் எதற்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று எந்தவொரு மக்களும் ஏற்கமுடியாத நிகழ்வாகவே பார்க்கவேண்டியுள்ளது.

நாம் இன்றைய காலத்தில் மாணவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது மேம்பாட்டை வளர்க்க உறுதுணையான ஏணிகளாக இருக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.

கடந்த காலத்தில் எமது மக்களும் கல்விச் சமூகமும் அனுபவித்த கசப்பான விடயங்களையும், சம்பவங்களையும் மீண்டும் புதுப்பித்து மாணவர்களை தவறான வழியில் செல்வதை தடுக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை வகிக்கவேண்டிய இந்த கல்வி நிறுவனம், எதற்காக இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக உள்ளது.

அண்மையில் நடைபெற்ற துஷ்பிரயோகங்கள், செயற்பாடுகள், கல்வி நிறுவனங்களை மூடுதல் என்பன எமது மாணவ சமூகத்திற்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களின் இயல்பு நிலையும் மீண்டும் கடந்த கால சோகமான வாழ்வியல் நிலைக்கு கொண்டுசென்றுவிடும். எனவே இவ்வாறான மூடுதல்கள், பகிஸ்கரிப்புகளை கைவிட்டு மாணவர்களின் வளர்ச்சிப் பாதைக்கு வழிகோலும் நடவடிக்கைகளை இந்த உயர்கல்வி சமூகம் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடகவுள்ளது.

எனவே இளம் சமூகத்தின் உணர்ச்சிகளை கடந்த காலத்திற்கு இட்டுச் செல்லாது புதியதொரு அறிவுமிக்க சமூக விடியலை நோக்கிய பயணமாக ஆக்கவேண்டுமென்பதே எமது கட்சியின் வேண்டுகோளாக இருக்கின்றது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

பல்கலைச் சமூகம் மீதான கொலை அச்சுறுத்தல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் – மாவை

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாது – உதய பெரேரா

யாழ். பல்கலைக் கல்விச் சமூகத்தை எச்சரித்து வெளியாகிய துண்டுப்பிரசுரத்தினால் பீதி!

யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

Related Posts